SuperTopAds

மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!!

ஆசிரியர் - Admin
மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!!

தமிழ் நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு, இந்திய சட்டத்தின் கீழான நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வே.இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைய்தீனின் அழைப்பை ஏற்று, தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்:-தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை.

அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை.

புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.

இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.

30 வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.