நல்லைக் கந்தன் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட சித்திரைப் புத்தாண்டு வழிபாடுகள்
பிறந்திருக்கும் ‘விளம்பி’ தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று சனிக்கிழமை(14) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
ஆலய மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள வேற்பெருமானுக்கு விசேட பூசை அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் வேற்பெருமான், வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட தீபாராதனை, பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து முத்தெய்வங்களும் உள்வீதியில் எழுந்தருளி உலா வந்ததுடன் மயில்வாகனத்தில் வெளிவீதியுலா வந்தும் அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முத்தெய்வங்களும் வலம் வந்த காட்சி அற்புதமானது.
சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை வழிபாட்டில் நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றனர்.