SuperTopAds

சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு கடிதத்தை அனுப்பலாம்!

ஆசிரியர் - Admin
சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு கடிதத்தை அனுப்பலாம்!

தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தமிழரசுக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது, விரும்பினால் இரா.சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு கடிதத்தை அனுப்பலாம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற அரசியற் குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த கூட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழுவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய இணைய வழியாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட மாட்டார்கள் என்பது உறுதியானதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் கடிதத்தை வேண்டுமானால் அனுப்பலாம் என மாவை திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராசா தனது உரையில் தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணம் அனுப்பப்பட்டிருக்காது, அதனால் அவர்களுடன் பேசி, மீண்டும் ஒரு ஆவணம் தயாரித்து அனுப்பலாமென யோசனை தெரிவித்தார். உடன் சுமந்திரன் அதனை மறுத்தார்.

தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணம் அனுப்பப்பட்டு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு விட்டது, அதனை நான் உறுதி செய்தேன் என குறிப்பிட்டார்.

பின்னர், அவர் விளக்கமளிக்கையில், “கடந்த 28ஆம் திகதி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைய வழி கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, மிக தாமதமாக என்னையும் இணைப்பில் இணைத்தனர்.

அப்போது நடந்த கலந்துரையாடலில் ஐ.நாவிற்கு அனுப்பும் ஆவணத்தை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி ஆவணம் தயாரிப்பதென அதில் முடிவெடுத்ததால், நான் சம்பந்தனுடன் மட்டும் கலந்துரையாடி ஆவணத்தை தயாரித்தேன். ஆவண தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது ரெலோவின் அறிக்கையை, அதன் பேச்சாளர் சுரேன் அனுப்பியிருந்தார், அவர் ஒரு கட்சியின் பேச்சாளர். இப்படியான நடவடிக்கையை செய்ய அவர் யார்? அதனால் நாம் அதை கணக்கிலெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட வசனம் ஏன் இதில் இணைக்கப்பட்டதென கேள்வியெழுப்பப்பட்ட போது, பான்கீ மூனின் நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பகுதியையே அதில் இணைத்தேன் என குறிப்பிட்டார்.

இதையடுத்து, இராணுவமும், புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஆவணத்தில் திருத்தம் செய்யாமல் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

நாளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை, நாடாளுமன்றத்தில் கூட்டி, தமிழ் கட்சிகள் கூட்டாக ஆவணம் தயாரித்த விடயத்தை ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது.