ஜெனிவாவுக்கு அனுப்பும் கடிதம்- தமிழ்க் கட்சிகளுக்குள் முரண்பாடு!

ஆசிரியர் - Admin
ஜெனிவாவுக்கு அனுப்பும் கடிதம்- தமிழ்க் கட்சிகளுக்குள் முரண்பாடு!

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முன்னெடுப்பில் ஆவணமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ரெலோவின் முன்னெடுப்பில், பல கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணமொன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட மாட்டார்கள் என அவர்களின் கூட்டணி முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில், பான்கீ மூனால் 2010 இல் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தயாரித்த அறிக்கையில், இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளனர். இவற்றில் சில போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கியத்தால், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதுடன் மூவரும் தனியாக ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமது அதிருப்தியை ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்ட சுமந்திரனிடம் அறிவித்துள்ளதாகவும், அவை ஏற்கப்படாததன் காரணமாக கையொப்பமிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

பான்கீமூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் பல அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றை நாம் சுட்டிக்காட்டி எமது ஆவணமொன்றில் இணைப்பதென்பது, நாமும் அந்த அவதானத்துடன் உடன்படுகிறோம் என்பதாலேயே.

நாம் புத்திசாலிதனமாக செயற்படுகிறோம் என ஆவணத்தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கருதக்கூடும். எமது விரலால் எமது கண்ணை குத்த நாம் தயாராக இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக இலங்கை தமிழரசு கட்சி அனுப்பும் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், VERITE RESEARCH நிறுவனத்தின் ஆய்வும் ஆணையாளருக்கு இணைத்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. இக் கடிதம் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின் ஆவணம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு