SuperTopAds

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை திரும்பியும் பாராத சர்வதேசம்!

ஆசிரியர் - Admin
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை திரும்பியும் பாராத சர்வதேசம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கே, சர்வதேசம் செயற்பட்டு வருவதாக, மன்னார் மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

அத்துடன், தாங்கள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேசம் தங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி, மன்னாரில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருவதாகவும் ஆனால், இவ்வாறு அனுஷ்டிப்பதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் கூறினார்.

இந்த அரசாங்கத்திடம் இருந்து சர்வதேசம் நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், பல வருடங்களாக தாங்கள் வீதிகளில் நின்று போராடி வந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தங்களை சர்வதேசம் திரும்பி பார்ப்பதாக இல்லை எனவும் இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை எனவும் கூறினார்.

'சிங்கள அரசியல்வாதிகள், இலங்கையில் எவரும் காணாமல் போகவில்லை. காணாமல் போனவர்கள் என கூறப்படுகின்றவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

'எனவே, வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என கூறப்படுகிற எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை அரசாங்கம் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் மன்னாரில் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் செய்யப்படவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, இந்த வருடத்துக்குள் தங்களுக்கு சர்வதேசம்; நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், சர்வதேசத்தின் செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேசம் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கூறினார்.