அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்! - மேயர் மணி சவால்.
ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வழக்கு தொடரவும் தான் தயாரென அவர் தெரிவித்தார்.
யாழ். மாநகரசபை சபையில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், மாநகர எல்லைக்குள் இரவோடிரவாக விளம்பர பலகை அமைப்பதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிலரால் விஷமத் தனமாக செய்யப்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி மிக்கதான நடவடிக்கை. இவை மாநகர சபையினுடைய பூரண அனுமதியுடனே செய்யப்பட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட மாகாண சபை உப விதிகளின்படி மாநகர முதல்வர் தான் விளம்பரத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதென தெளிவாக உள்ளது. முதல்வரிடம் அல்லது மாநகர ஆணையாளருக்கு இந்த அதிகாரம் காணப்படுகின்றது. இதில் மாநகரசபைக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஆனாலும் நான் ஒவ்வொரு விடயங்களையும் சபையினுடைய அனுமதியுடனே செய்கிறேன். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
மாநகர சபை உறுப்பினர்கள், மக்களுக்கு வருகின்ற காசில் இழப்பை ஏற்படுத்துபவர்களாக இருந்தால் நான் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அதனை அவர்கள் வழங்குவதற்கும் சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.