SuperTopAds

இலங்கையில் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாதா?

ஆசிரியர் - Admin
இலங்கையில் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாதா?

இலங்கையில் ஏற்றப்படும் சில கொரோனா தடுப்பூசிகளை 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையிலிருந்து அவ்வாறான நாடுகளுக்கு பயணம் செய்யவிருப்பவர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு அரசு மாற்று வழியை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ மக்கள் துன்பத்தின் பிடியில் வாழ்கின்றனர். தெருக்களில் விழுந்து சாகும் மக்களை இந்த நாடு சந்திக்கின்றது. நான் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற வைத்தியசாலைகள் , கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள், உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகள் எங்கேயும் தொற்றாளர்களை பராமரிக்க இடமில்லை .எல்லா வைத்தியசாலைகளும் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றன.

வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களை பார்க்கக்கூடியளவுக்கு தாதியர்களுக்கு, வைத்தியர்களுக்கு நேரமில்லை. ஏனைய நோயாளிகளை பார்வையிட முடியாதுள்ளது. அருகிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்கள் தோறும் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலை வருமென்று ஏற்கனவே எல்லோரும் எச்சரித்திருந்தனர். சுகாதாரத்துறையை சார்ந்தவர்கள் எச்சரித்திருந்தனர். பல வைத்தியர்கள் அழுதழுது சொன்னார்கள். பல தாதியர்கள் கண்ணீரோடு சொன்னார்கள். ஆனால் இந்த அரசு இதுவரை அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டு வருடங்களை கொரோனா நெருங்கப் போகின்றது. இன்றுதான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லாக்கட்சிகளையும் அழைத்து பேசுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சரியான சட்டம் இல்லை. ஒரு நியாயமான சட்டத்தின்படி இது கையாளப்படுவதில்லை. இராணுவம் அறிவிப்பதுதான் கொரோனா சட்டம் என்று இந்த நாட்டிலே நிலைமையுள்ளது. இங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசும்போது, இந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் தங்கள் 10,000 ரூபா உணவுப்பொதிகளை வழங்குவதாக கூறினார். இது எத்தனை குடும்பங்களுக்கு செல்கின்றது என்பது அமைச்சருக்கு தெரியுமா? வடக்கில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த 10,000 ரூபாவுக்கான நிவாரணப்பொதி சென்றடைவதில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள், தொலைபேசி இலக்கங்களை தருகின்றேன். தேவையானால் தொடர்பு கொண்டு கேளுங்கள். ஏனெனில் இதனை வழங்க அரசிடம் நிதி இல்லை. இதுதான் நாட்டின் இன்றைய நிலை என்றார்.