மகளின் கனவுக்காக மரண செய்தியை மறைத்த தாய்!! -நாடு திரும்பியதும் ஒலிம்பிக் வீராங்கனை-

ஆசிரியர் - Editor II
மகளின் கனவுக்காக மரண செய்தியை மறைத்த தாய்!! -நாடு திரும்பியதும் ஒலிம்பிக் வீராங்கனை-

நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, திருச்சி திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, அவருடைய சகோதரி உயிரிழந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதார். 

நாட்டுக்காக விளையாடச் சென்ற மகளின் கவனம் சிதறிவிடக் கூடாது என்பதால் தனலட்சுமியின் தாயார், மறைவுச் செய்தியைக் கூட மறைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தமிழக தடகள வீராங்கனையான தனலட்சுமி, பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

போட்டிக்கும் தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கியிருந்த தனலட்சுமி அங்கிருந்தே டோக்கியோவுக்கும் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி தனலட்சுமியின் சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால், போட்டியிலிருந்து கவனம் சிதறி விடும் என எண்ணிய அவரது தாயார் தெரியப்படுத்தாமலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, தான் தனலட்சுமிக்கு தனது சகோதரி உயிரிழந்த செய்தி தெரியவந்துள்ளது. தன்னுடைய கனவுக்காக கஷ்டப்பட்ட சகோதரியை இழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அவர் விமானநிலையத்திலேயே கதறி அழுதார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்ததை கொண்டாடக் கூட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தனலட்சுமியை அவரது தாயார் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.