ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!

ஆசிரியர் - Admin
ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!

ராமபிரான் சீதையை மீட்டுவர உதவும் வகையில் தமிழ்நாட்டின் ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடியையும், இலங்கையில் உள்ள தலைமன்னாரையும் இணைக்கும் விதமாக கடலில் 50 கி.மீ. தூரத்துக்கு வானர சேவை படைகளால் ராமர் பாலம் கட்டப்பட்டதாக இதிகாசங்கள் கூறுகின்றன. 

ஆனால் இந்த பாலம் இயற்கையாக அமைந்த ஒன்று என்னும் வாதமும் உண்டு. 

இது மனிதர்களால் கட்டப்பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்ததா? என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் அப்போதைய தலைவர் ஒய்.சுதர்ஷன் ராவ் அறிவித்து இருந்தார். 

இதற்காக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் ஆய்வு பணியில் ஈடுபடுவார் என்றும் அதற்காக நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறி இருந்தார். 

இந்த நிலையில் அண்மையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக அரவிந்த் ஜாம்கேதார் பதவி ஏற்றார். ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் என்னவாயிற்று? என்று அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அரவிந்த் கூறுகையில், “இதுபோன்ற ஆய்வுத் திட்டத்தை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. கவுன்சில் உறுப்பினர்களே அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இந்த திட்டத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தனர். எனவே இதுபோன்ற ஆய்வு எதையும் மேற்கொள்ளப்போவதில்லை. இதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படாது” என்றார். 

மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் பணி அல்ல. இந்திய தொல்லியல் துறைதான் இதற்கு பொருத்தமானது. அப்படியே நாங்கள் அதிக பட்சமாக சிபாரிசு செய்தாலும் கூட இந்த பணியை தொல்லியல் துறையிடம்தான் கொடுக்க இயலும்” என்று குறிப்பிட்டார். 

(மாலைமலர்)