யாழ்.மாவட்டத்தில் அவரச சிகிச்சை பிரிவு மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடமில்லை! ஒட்சிசன் தேவை அதிகரிப்பு, பணிப்பாளர் எச்சரிக்கை..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா,
ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன், பொதுமக்கள் தற்போதைய அபாய நிலையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், தடுப்பூசிகளை பெறுமாறும் கோரியுள்ளார்.
இன்று பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்திருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள சகல கொரோனா சிகிச்சை நிலையங்களும் நிரம்பியுள்ளது. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் சகல கட்டில்களும் நிரம்பியுள்ளது.
அதேபோல் ஒட்சிசன் தேவையும் சடுதியாக அதிகரித்துள்ளது, வழக்கமாக 120 பொிய ஒட்சிசன் சிலின்டர்களை ஒரு நாளுக்கு பயன்படுத்தினோம் தற்போது ஒரு நாளுக்கு சுமார் 180 பொிய ஒட்சிசன் சிலின்டர்கள் தேவையாக உள்ளது. அதற்காக 3 தடவைகள் யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம்
அனுராதபுரத்திற்கு அனுப்பபடுவதாகவும் அவர் கூறியுள்ளதுடன், மக்கள் தடுப்பூசிகளை பெற்று, சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கூறியுள்ள அவர், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள்,
தாங்கள் தடுப்பூசி பெற்றிருப்பின் அதற்கான அட்டையை கொண்டுவருமாறும், போதனா வைத்தியசாலைக்கு விருந்தினர்கள் அதிகளவில் வரும் நிலையில் அதனை குறைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.