கரைச்சி பிரதேச சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு!

கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று காலை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அருணாசலம் வேழமாலிகிதனையும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு த.ரஜனிகாந்தையும் முன்மொழிந்தனர். இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில், வேழமாலிகிதனுக்கு 19 வாக்குகளும், த.ரஜனிகாந்துக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், சுந்திரக் கட்சியை சேர்ந்த இருவரில் ஒருவரும், ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இணைந்து 19 உறுப்பினர்கள் வேழமாலிகிதனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ரஜனிகாந்துக்கு, சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும், சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒருவரும் என 13 பேர் வாக்களித்தனர்.
உபதவிசாளர் தெரிவின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சி.தவபாலனையும், சுயேச்சைக் குழு த.செல்வராணியை முன்மொழிந்தனர். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 20 பேர் தவபாலனுக்கும், சுயேச்சைக் குழுவின் 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவரும் இணைந்து 12 பேர் செல்வராணிக்கும் வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈபிடிபியும் நடுநிலைமை வகித்தன.