SuperTopAds

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரிடம் வாங்கி குடித்துவிட்டு அவருக்கு அடியாள் வேலை செய்த கோப்பாய் பொலிஸார்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரிடம் வாங்கி குடித்துவிட்டு அவருக்கு அடியாள் வேலை செய்த கோப்பாய் பொலிஸார்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவருடைய கவனிப்பிலேயே கோப்பாய் பொலிஸார் தொடர்ச்சியான வன்செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை ஹயஸ் ரக வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த பொலிஸ் கும்பல் ஒன்று இளைஞனை கடத்தி சென்று 

சித்திரவதை செய்ததுடன் கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் 

யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞனை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமானது

 56 - XXXX இலக்க வாகனம் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாது, உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த வாகன உரிமையாளர் 

பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன் வழக்கு தவணைகளுக்கு செல்லாத நிலையில் 

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நபர் கோப்பாய் பொலிஸாருடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார். 

குறித்த நபர் தனது நண்பர்களுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் பொலிஸாருடன் மது விருந்துக்களில் கலந்து கொள்வார். 

பின்னர் மது அருந்திவிட்டு தனது வாகனத்தில் பொலிஸாரை அழைத்துக்கொண்டு உரும்பிராய் பகுதிக்கு சென்று வீதிகளில் நிற்கும் இளைஞர்கள், 

தலைக்கவசம் அணியாது செல்வோர் என்பவர்களை வழிமறித்து ,பொலிஸார் வாகனத்தில் இருக்க வாகன உரிமையாளரும், 

அவரது நண்பர்களும் இறங்கி தம்மை சிவில் உடை தரித்த பொலிஸார் என கூறி அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வார்கள். 

அத்துடன் தனது நண்பர்கள், தனக்கு தேவையானோருடன் முரண்பட்டுக்கொண்ட நபர்களின் வீடுகளுக்கு மது போதையில் வாகனத்தில் பொலிசாரை அழைத்து சென்று, 

அவர்களை தாக்குவது, மிரட்டுவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக 

உள்ள வீடொன்றில் மது விருந்து நடைபெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் பொலிசாரின் மது விருந்துக்கு வீட்டினை வழங்கி வருகின்றார். 

குறித்த வீட்டில் பொலிஸ் சீருடையுடன் கடமை நேரத்தில் சென்று மது அருந்தி விட்டே வாகனத்தில் சென்று இளைஞனை கடத்தி தாக்கியுள்ளனர். 

இதேவேளை குறித்த இளைஞனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கும்போது ஏற்கனவே செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரையும் வாகனத்தில் கடத்தி 

தாக்கிய நிலையில் வாகனத்தில் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகள் குறித்தும் , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 

பல தடவைகள் தெரியப்படுத்திய போதிலும் அவர் அது தொடர்பில் கண்டுகொள்ளாது இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமை தொடர்பில் 

ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலும் நேற்றைய தினம் இரவும் குறித்த நபருடன் பொலிஸார் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கோப்பாய் பொலிஸாரினால் மனிதவுரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு 

4 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன. அவை நான்கும் உரும்பிராய் பகுதிகளை சேர்ந்தவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடாகும். 

இந்த குழுவினரே அவ்வாறு மனிதவுரிமை மீறலில் ஈடுபட்டு இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் திணைக்களத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் 

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களே எதிர்ப்பார்த்து உள்ளனர்.