யாழ்ப்பாணத்துக்கு சிங்கள அரச அதிபரை நியமிப்பது ஜனநாயக விரோத செயல்!
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு நியமிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு,
கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ
பிரதமர்
பிரதமர் அலுவலகம்
கொழும்பு
மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்
மேற்குறித்த விடயம் தொடர்பில் உங்களது கவனத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில், யாழ். மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்.
நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ். மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள்.
இந்த பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும்.
மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.
எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி இரா சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர் - திருகோணமலை மாவட்டம்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.