சிறுமியின் மரணத்தில் நீதி மற்றும் உண்மையை கண்டறிய முஸ்லிம் மக்கள் குரல் கொடுக்கவேண்டும்! யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி மையம் கோரிக்கை..
றிசாட் பதுவுதீன் வீட்டு கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியின் மர்மமான உயிரிழப்புக்கு முஸ்லிம்கள் குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
என யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி மையத்தின் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீ காந்தரூபன் தெரிவித்தார். இன்று காலை யாழ்.நகரப் பகுதியில் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு
நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக சிறுமி கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்திருக்கின்றார்.
அவரின் மரணம் தொடர்பில் இலங்கையின் பல பாகங்களிலும் நீதி கேட்டுப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் கூலித் தொழிலாளர்களாக மலயகச் சிறுமிகளை அழைத்து வருவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்த வேண்டும்.
குறித்த சிறுமி கொழுபில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டு பிரபலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக
வேலை செய்த நிலையில் மரணம் சம்பவித்துள்ளது அவரது மரணம் தொடர்பில் தற்போது பல புதிய விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றநிலையில்
நீதியை நிலைநாட்டுபவர்கள் துரிதகதியில் செயற்பட்டு சிறுமியின் மரணத்திற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாது குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுக்க முன் வராமை கவலையளிக்கின்றது.
ஆகவே இன மத மொழி வேறுபாடின்றி சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.