உவர் நீரை பயன்படுத்தி கட்டப்படும் வைத்தியசாலை கட்டிடம்! வழக்கம்போல் அதிகாரிகளுக்கு எதுவும் தொியாதாம், செலவு 4 கோடியாம்..
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடம் உப்பு நீரில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் தற்போது உடைக்கப்பட்டு சுமார் 4 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கட்டடத்தை அமைக்கும் பணியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. வைத்தியசாலையில் உள்ள கிணறு உப்பு நீராகக் காணப்படுவதால் வைத்தியசாலைப் பயன்பாட்டுக்கு கூட
கிணற்று நீரைப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறான நிலையில் கட்டடத்தை அமைக்கும் நிறுவனம் அருகில் உள்ள தனியார் வீட்டில் இருந்து நீர் எடுப்பதாக கூறிக்கொண்டு உவர் நீரான கிணற்று நீரை பயன்படுத்தி
கட்டடத்தை அமைத்து வருகிறது. விடயம் தொடர்பில் சமூக மட்ட அமைப்பினர் ஆராய்ந்தபோது அப்பகுதியில் உள்ள தனியார் வீட்டில் ஓரிரு நாட்கள் மட்டுமே கட்டுமான பணிகளுக்கான நீர் பெறப்பட்டதாகவும்,
அதன் பின்னர் எடுக்கவில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது விடயம் தொடர்பில் தமக்கு
முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்தார். அப் பிரதேச கிராம சேவையாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது விடயம் தொடர்பில் சமூக மட்ட பிரதிநிதியொருவர் தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தியதாகவும்,
அலுவலக நாட்களில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.