பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய முக்கிய செயலாளர் அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு விஜயம்
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் சனிக்கிழமை(10) மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அம்பாறை மாவட்ட பாடசாலை வளங்கள் மற்றும் கல்வி மேம்பாடுகள் தொடர்பில் ஆராயும் விஜயமொன்றினை கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும்இ இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினரை சந்தித்து இலங்கை இளம் தலைமுறையினரின் கல்வி மேம்பாடுகள், பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு தேவையான உதவிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று ஆயிசா பாலிகா மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம், கல்முனை பத்திமா கல்லூரி, கல்முனை வெஸ்லி உயர்தரப் படாசாலை, கல்முனை ஸாஹிரா கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, சம்மாந்துறை மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கும் சென்று கல்வி நிலைகள், வள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த விஜயத்தின் போது கல்வியமைச்சின் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இசட். தாஜுதீன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஓய்வு பெற்ற பிரதம பொறியியலாளர் என்.டீ.எம். சிராஜுதின், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக் ஆகியோரும் கலந்துகொண்டு பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு போன்றவர்களுடன் பாடசாலைகளின் கல்விநிலைகள், தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலை நிர்வாகத்தினர்களினால் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத்திடம் தேவைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டது.