அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – யாழ் மாவட்டத்தில் பல் பரிமாண நகரமாகின்றது வேலணை பிரதேசம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி நகரப் பகுதியை பல்பரிணாம நகரமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய நாட்டில் 100 நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சி காரணமாக யாழ் மாவட்டத்தில் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவற்குழி, தெல்லிப்பழை, மருதனார்மடம் ஆகிய பிரதேசங்கள் குறித்த பல்பரிமாண நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இன்றையதினம் (10) வேலணையின் வங்களாவடி நகர்ப்பகுதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இம்மாத இறுதிக்கள் குறித்த பணிகளை ஆரம்பித்துவைக்கும் முகமாக நகர அபிவிருத்தி திணைக்கள (UDA) பணிப்பாளர் தலைமையிலான குழு மற்றும் RDA தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை தவிசாளர், பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.