சிவப்பு கிரவலுக்கு பதிலாக தரமற்ற வெண்கிரவல் வீதி!!
கிளிநொச்சி வன்னேரிக்குளம் வீதிப் புனரமைப்புகளில் குறைபாடுகள் தொடர்வதாக, கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் நா.செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் 63 ஆண்டுகளுக்குப் பின்னர், நான்கு மாதங்களுக்கு முன்னர் அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, வேரவில், பொன்னாவெளி வரை வீதிப் புனரமைப்புகள் நடைபெற்று வருகின்றன.
வீதிப் புனரமைப்புகளின் தொடக்கத்திலே கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு வீதிப் புனரமைப்புகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
சிவப்பு கிரவலுக்கு பதிலாக தரமற்ற வெண்கிரவல் வீதிப் புனரமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கடிதத்தின் மூலம் நேரடியாக முறைப்பாடுகள் செய்திருந்தோம்.
அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் முருகன் கோவில் வரை கூடுதலாக சிவப்பு கிரவல் பயன்படுத்தப்பட்டு வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் வன்னேரிக்குளம் முருகன் கோவிலில் இருந்து ஜெயபுரம் வரையான மழை காலத்தில் கூடுதலாக வெள்ளம் தேங்குகின்ற வயல் நிலங்கள் சூழ்ந்த ஈரலிப்பான நிலப்பரப்பில் தரமற்ற வெண் கிரவல்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எமது சூழலில் தரமான சிவப்புக் கிரவல் காணப்படும் நிலையில் தரமற்ற வெண் கிரவல் பயன்படுத்தப்பட்டு வன்னேரிக்குளத்திற்கும் ஜெயபுரத்திற்கும் இடையில் வீதி புனரமைக்கப்படுவது பொருத்தமற்றது.
அக்கராயனில் இரு வீதிகளில் தரமற்ற வெண் கிரவல்கள் பயன்படுத்தப்பட்டு வீதிப் புனரமைக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உள்ளேயே வீதிகள் பெருங் குன்றுங்குழியுமாக மாறி வரும் நிலையில்,
63 ஆண்டுகளுக்கு பின்னர் அமைக்கப்படுகின்ற எமது கிராமத்தின் வீதியில் தரமற்ற வெண் கிரவலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வீதிப் புனரமைப்பினால் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
வீதிப் புனரமைக்கப்பட்டு சிறிய காலத்திலேயே வீதி சேதமடையக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வீதி வேலைத் திட்டத்தில் வீதி வேலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடுகள் செய்யலாம் என்பதன் அடிப்படையிலேயே இத்தகவலை மாவட்டச் செயலாளராகிய தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன் எனவும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை பல்லவராயன்கட்டுச் சந்தியில் இருந்து பொன்னாவெளி வரை நடைபெறுகின்ற வேலைத் திட்டங்களிலும் தரமற்ற உள்ளீடுகள் பயன்படுத்தப்படுவதாக கிராஞ்சி,வேரவில்,பொன்னாவெளி மக்கள் குறைபாடுகள் தெரிவிக்கின்றனர்.