கல்வியிலும் இராணுவமயமாக்கலா?

ஆசிரியர் - Admin
கல்வியிலும் இராணுவமயமாக்கலா?

நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதெனவும், இன்று முன்னெடுக்கும் இராணுவ மயமாக்கலில் உயர் இராணுவ அதிகாரிகளை முனைவர் பட்டம் கொடுத்து ஏனையவர்களை மட்டந்தட்டும் நடவடிக்கைகளே இடம்பெறப் போகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினர்.

“1970 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்த கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சிறிமாவோ பண்டாரநாயக காலத்தில் கல்வித்துறையில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் இடம்பெறுவதாக தெரிந்துகொண்டு அதனை எதிர்த்து ஆயுதம் எந்த நிர்பந்திக்கப்பட்டனர் என்பது இன்று பலருக்கு தெரியாது போயுள்ளது. கல்வி என்பது ஒரு நாட்டின் முக்கியமான துறையாகும். இது சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும்.

அவ்வாறு இருக்கையில் சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. கொவிட் கட்டுப்பாட்டு நிலைமைகளாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இராணுவத்தின் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது. விவசாயத்திலும் அவர்கள் கை வைத்துள்ளனர். இந்த நிலை இன்று உயர் கல்வியிலும் கை வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இன்று கொண்டுவந்துள்ள சட்டமூலம், உயர் கல்வி அமைச்சிற்கு கீழ் வரவில்லை, மாறாக பாதுகாப்பு அமைச்சருக்கு கீழேயே கொண்டுவரப்படுகின்றது. எனினும் தேரர்களுக்கு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கூட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ் உள்ளதென்றால் இராணுவ பல்கலைக்கழகமும் அவ்வாறே கொண்டுவரப்பட வேண்டும்.

அதேபோல் இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பி.எச்.டி பட்டதாரிகளாக மாற்றியமைக்கவா இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று முன்னெடுக்கும் இராணுவ மயமாக்களில் உயர் இராணுவ அதிகாரிகளை முனைவர் பட்டம் கொடுத்து ஏனையவர்களை மட்டந்தட்டும் நடவடிக்கைகளே இடம்பெறப் போகின்றது.

தேசிய பாதுகாப்பு கொள்கைத்திட்டம் என்னவென தெரிந்து கொள்ள முடியாத நிலை எமக்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த கொள்கை என்னவென்பது சகலரும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதும் இராணுவ கொள்கைக்கு கீழ் சிவில் மாணவர்களுக்கும் கற்பிக்கவே முயற்சிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் பின்னர் இப்போது வரையில் இராணுவத்தினர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு கொடுப்பனவுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது.

இன்றுள்ள நிலையில் இலங்கைக்குள் இன்னொரு யுத்தத்தில் இராணுவம் ஈடுபட வேண்டிய தேவை வராது, எனவே சர்வதேச சவால்களுக்கே இனி நாம் முகங்கொடுக்க வேண்டும். அவ்வாறு என்றால் இராணுவத்தை மட்டும் அல்ல, ஏனைய படைகளையும் பலப்படுத்த வேண்டும்.

ஆனால் இராணுவத்தை மாத்திரம் பலப்படுத்துவதன் நோக்கம் என்ன? யாருடன் சண்டையிட இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது. எனவே இராணுவ மயமாக்கலை கைவிட்டு மாணவர்களுக்கான கல்வியை வழங்கும் நடவடிக்கைகளை, இலகு கடன் உதவிகளை பெற்றுக்கொடுத்து கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு