ஈழ தமிழ் மாணவர்களுக்கு தனி பல்கலைகழகம்..
ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்தார்.
இதன்போது பல்கலைக்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வந்த நடிகர் கருணாஸ் காலை 9.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் 1மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் கருணாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் முகாம்களில் உள்ள ஈழ தமிழ் மாணவர்கள் மற்றய பல்கலைக்கழகங்களில் கல்விக்காக கையேந்தக் கூடாது என்பதற்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க உள்ளேன்.
அந்த பல்கலைக்கழக கட்டிடத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், பொது நலவாதியான ஒருவர், என்ற அடிப்படையில் முதலமைச்சரை அடிக்கல் நாட்டுவதற்கு அழைத்துள்ளேன். அவர் வருவதாக கூறியுள்ளார். நான் தமிழகம் திரும்பிய பின்னர் முதலமைச்சரை தமிழகத்திற்கு அழைப்பதற்கான திகதியை அறிவிப்பேன்.
மேலும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழக மக்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டபோதும், தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியபோதும் மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அறிக்ககளை விடுத்தவர். அந்தவகையில் காவிரி நீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்த பாரிய அறவழி போராட்டத்திற்கான அறைகூவலை முதலமைச்சர் விடுக்கவேண்டும் என கேட்டுள்ளேன்.
அவர் அதனை ஆழமாக பார்த்து வருகிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன் என்றார். தொடர்ந்து ஈழ தமிழ் மாணவர்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை யாழ்.மாவட்டத்திலும் நிறுவுவீர்களா? என கேட்டபோது அவ்வாறான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். அதற்காகவும் பாடு படுவேன் என்றார்.