வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு – அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு தேவையான வலைகளை முழுமையாக விநியோகிக்கும் வகையில் லுணுகல வலை உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் லுணுவில வலை உற்பத்தித் தொழிற்சாலையின் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சில் இன்று(06.07.2021) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், லுணுவில வலை உற்பத்தித் தொழிற்சாலையில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது, கொவிட் பரவல் காரணமாக சீரான இறுக்குமதிகள் இன்மையினால் தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துக் கூறிய தொழிற் சங்கப் பிரதிநிதிகள், கொவிட் காரணமாக வேலை நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையினால் மாதாந்தம் சுமார் 15 தொன் வரையில் மேற்கொள்ளப்பட்ட வலை உற்பத்திகள் தற்போது 7 தொன்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன், கடற்றொழில் அமைச்சினால் கொள்வனவு செய்யப்படுகின்ற வலைகள் தமது நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்,
கிரிக்கெட் வலைப் பயிற்சிகள் உட்பட பல்வேறு தேவைகளுக்காக விளையாட்டுத் துறை அமைச்சினால் வருடந்தோறும் பெருமளவான வலைகள் கொள்வனவு செய்யப்படுகின்றமையினால், அவற்றை தமது உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
தொழிற் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி மூலப்பொருட்களை சீராகப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்பத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறும், கடற்றொழில் அமைச்சு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஆகியவற்றிற்கான வலை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடகடல் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வடகடல் நிறுவனத்தின் தலைவர் திரு. திசைவீரசிங்கம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிர்வாக ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.