SuperTopAds

வன்னி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்ற வேண்டும்!

ஆசிரியர் - Admin
வன்னி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்ற வேண்டும்!

கொரோனா தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் இதுவரை வன்னி மக்களுக்கு ஏற்றப்படாமை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் பரவலாக காணப்படும் நிலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போது இந்நடவடிக்கையில் அரசின்ற ஈடுபாடு போதுமானதாக காணப்படாமையினாலேயே பல பகுதிகளிலும் மக்கள் முதலாவது தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு பொது மகனுக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சுகாதார பகுதியினருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பொது மக்களுக்கு வழங்க பாரபட்சம் காட்டி வரும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தின் நுழைவாயிலாக காணப்படும் வவுனியா மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவது கட்டாயமாகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்குமப்பால் இன்று வவுனியாவில் கொரனா தொற்றாளர்கள் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்ற போது அதிகமாக காணப்படுகின்றனர். கொரனா மரணங்கள் 19 வரை அதிகரித்துள்ளது. இது அம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று மன்னார் மாவட்டமும் இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வைரஸ் பரவல் மீனவர்கள் மூலம் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள மாவட்டமாக காணப்படுகின்றது. ஏனவே இங்குள்ள மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

முல்லைத்தீவில் மீன் வியாபாரத்திற்காக பல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து செல்வதனாலும் குறித்த மாவட்டம் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண எல்லைகளை கொண்டு காணப்படுவதனாலும் ஏனைய மாகாண மக்கள் பல்வேறு தேவைகளின் பொருட்டு இங்கு வந்து செல்வதனாலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு குறித்த தடுப்பூசி கட்டாயமாக செல்லுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையின்றி காணப்படுகின்றமையை பார்க்கும்போது பாரபட்சமாக செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.