கூட்டமைப்பில் இருந்து பிரியும் எண்ணம் இல்லை!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பில் இருந்து பிரியும் எண்ணம் இல்லை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று, செயற்படுவதற்கான நிலை, தற்போது வரை ஏற்படவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளன எனவும், அதனை நிவர்த்தி செய்து கொண்டு, கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே செயற்படுவோமெனவும் கூறினார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள், பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ்நிலையில் காணப்படுகின்றதெனவும் அதற்கான முதல் படி எரிபொருள்களின் விலையேற்றத்தை கருதலாமெனவும் கூறினார்.

எனவே, அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இல்லை என்றால், இவ்வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்படுமெனவும் கூறினார்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை நாட்டுக்குள் கொண்டு வந்ததற்கான நியாயத்தையே அரசாங்கம் கூறுவதாகத் தெரிவித்த அவர், இந்த கப்பலின் தற்போதைய நிலையால், மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் என்பது உண்மை எனவும் மன்னார் வலை குடாவில் கூட இந்தக் கப்பலின் தாக்கம் ஏற்பட்டுள்ளதெனவும் கூறினார்.

எனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் ஊடாக பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியாதென்றும், செல்வம் கூறினார்.

இதேவேளை, 'யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் தொற்றாளர்கள் உள்ளனர். அங்கே தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

'வன்னி மாவட்டம் குறிப்பாக முல்லைத்தீவிலும் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. 'மேலும் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அரச செலவில் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.

அவ்வாறு செய்யாமல் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை சமூகத்திலும் மக்கள் மத்தியிலும் முழுமையாக சென்றடைய வேண்டும்' என்றும், செல்வம் கூறினார்.

அத்துடன், 'கூட்டமைப்புக்குள் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். தமிழ்த் தேசிய கூட்டமையில் இருந்து டெலோ வெளியில் வந்து செயற்படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் உள்ளன. அதனை தெரியப்படுத்தியுள்ளோம். இருப்பினும், கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு செயற்படுவோம்' என்றும், அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு