SuperTopAds

தடுப்பூசி போட்டபின் உடலில் சில மாற்றங்களா? -கொரோனா தொற்று என்கிறது புதிய ஆய்வு-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட்டபின் உடலில் சில மாற்றங்களா? -கொரோனா தொற்று என்கிறது புதிய ஆய்வு-

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு இதுவரையில் இல்லாத வகையான புதிய அறிகுறிகள் ஏற்படுகின்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் முழுமையாகத் தடுப்பூசி போட்ட பல்லாயிரக்கணக்கானோர் அதன் பின்னரும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றமை உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

11 இலட்சம் மக்களிடம் நடந்த ஆய்வில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 0.2 விதமானவர்களுக்கு மற்றும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்ட 0.3 வீதமானவர்களுக்கு தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வழக்கமாக கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் வித்தியாசமாக புதிய அறிகுறிகள் தோன்றுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போட்ட 60 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் 24 வீதமானவர்களுக்கு தும்மல் அறிகுறியால் பாதிக்கப்பட்டனர். அத்துடன், தடுப்பூசி போட்டவர்களும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். இவை பொதுவானவையாகவே உள்ளன.

எனினும் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் தொற்றுக்குள்ளாகும்போது காது இரைச்சல் ஏற்படுவது பலரிடம் அவதானிக்கப்பட்டுள்ளது. காதில் ஏதேனும் ஒலிக்கும் சத்தம் கேட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும்போது பக்க விளைவாக கழுத்து, அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு மேல் அந்த வீக்கம் தொடர்ந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.