யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி திட்டங்களை வழங்கும் மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் நிவாரண உதவி வழங்குவோர் அந்தந்த பிரதேச செயலர்கள் ஊடாக மட்டுமே வழங்க முடியும். என மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாவட்ட செயலர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
நாட்டில் கொவிட்-19 தொற்று பரவிவருகின்ற காரணத்தினால், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு
அல்லலுறும் மக்களுக்கு உதவி வழங்குவதாகத் தெரிவித்து, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சில தனி நபர்கள், அமைப்புக்கள் நிதி திரட்டி வருவதாக அறியப்படுகின்றது.
ஆயினும் இந்த உதவிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் சென்றடைவதில்லை எனவும்
குறிப்பிட்ட சிலருக்கு எல்லா வழிகளிலும் கிடைக்கப்பெறுவதாகவும் பொதுமக்களினால் அறியத்தரப்பட்டுள்ளது.
எனவே இதனை ஒழுங்குபடுத்த வேண்டி பொறுப்பு அரசாங்க மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரியது என்பதனால் அரசாங்க அதிபரின் கண்காணிப்பில்
வழங்கப்படும் உதவிகளை தவிர்த்து வேறுமட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகள் அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாகவே வழங்கப்படல் வேண்டும்
என்பதுடன் மாவட்டச் செயலகத்தின் முன் அனுமதியைப் பெற்று வழங்கப்படவேண்டும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.