SuperTopAds

கடற்கரையில் பொருட்கள் எடுத்து சென்றவர்களுக்கு சிக்கல்..! விசேட பொலிஸ் குழு விசாரணையில், பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
கடற்கரையில் பொருட்கள் எடுத்து சென்றவர்களுக்கு சிக்கல்..! விசேட பொலிஸ் குழு விசாரணையில், பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

கொழும்பு துறைமுகத்தில் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கும் கப்பலில் இருந்து கடலில் விழுந்த பொருட்கள் கரை ஒதுங்கிவரும் நிலையில் அவற்றை எடுத்துச் செல்லும் மக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேற்படி தகவலை பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நீர்கொழும்பு, பமுனுகம, துங்காலுபிட்டி மற்றும் கொச்சிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் , 

கப்பலிலிருந்து கரையொதுங்கியுள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொருட்களை எடுக்கச் சென்றது சட்டவிரோத செயற்பாடாகும்.

குறித்த கப்பலில் இரசாயன திரவியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கப்பலிலிருந்து கரையொதுங்கியுள்ள பொருட்களில் எவ்வகையான இரசாயனங்கள் கலந்திருக்கும் என்று கூறமுடியாது.

இதன் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இவ்வாறு பொருட்களை எடுத்துச் சென்ற நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் நீர்கொழும்பு, பமுனுகம, துங்காலுபிட்டி மற்றும் கொச்சிகடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் விசாரணைகளை 

முன்னெடுத்து வருகின்றனர்.பிரதேச வாசிகள் அந்த பொருட்களை எடுக்கும் காணொளி பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அவற்றின் ஊடாகவும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 

அதற்கமைய குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.