பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்கி தாருங்கள்..! வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை, நிறைவேற்றுவார்களா..?
வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வழங்குமாறு மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பலனளிக்காத நிலையில் வடமாகாணத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீ.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 60 இலட்சம் ரூபா பெறுமதியான பிசிஆர் இயந்திரம் ஒன்றை பொலனறுவை வைத்தியசாலைக்கு வாங்கி கொடுத்துள்ளனார். இவரால் உருவாக்கப்பட்ட நிதியத்தினால் முற்று முழுதுமாக எந்வொரு அரச பங்கும் இன்றி வாங்கி கொடுத்துள்ளார்.
இவ்வாறு கொடையாளர்கள் விரும்பினால் பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முடியும் என்று வடக்கு சுகாதாரத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.வடக்கில் தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
வடக்கில் யாழ்.போதனா மருத்துவமனையிலும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திலுமே சோதனை இதுவரை மேற்கொள்ளப்படுகின்றது.வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல மாதங்களாகின்றது.
இதுவரை பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்படவில்லை.தென்னிலங்கையில் பெரும் வணிக நிறுவனங்கள், கொடையாளர்களே பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்குகின்றனர். அதேபோன்று வவுனியா மருத்துவமனைக்கும் பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றின் விலை ஆகக்கூடிய பெறுமதி 45 இலட்சமாகும். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் தொதியில்- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரனும், ஈ.பி.டி.பி. சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும் (அமைச்சர்) , சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனும் உள்ளனர். வன்னித் தேர்தல் தொகுதியில் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் செல்வம் அடைக்கலநாதன்,
சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோநோத ராதலிங்கம் ஆகியோரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் காதர்மஸ்தானும், ஈ.பி.டி.பி. சார்பில் கு.திலீபனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிஷாத் பதியூதீனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் அவர்களது சம்பளம்,
அமர்வுகளில் பங்கேற்பதற்கான கொடுப்பனவு எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட இதர கொடுப்பனவுகள் மூலம் 2 இலட்சம் ரூபா வரையில் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் 3 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாவை ஒதுக்கினால் வடக்கு மாகாணத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ஒரு பி.சி.ஆர். இயந்திரத்தை கொள்வனவு செய்ய முடியும்.
எமது வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட இவர்கள் எங்களின் பாதுகாப்புக்காக இந்த பி.சி.ஆர் இயந்திரத்தை கொள்வனவு செய்து வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். பி.சி.ஆர். இயந்திரம் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்றால் சோதனை முடிவுகளை உடனுக்கு உடன் வெளியிடக் கூடியதாக
இருக்கும் என்று வடக்கு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.