தீர்க்கமான தினமாகிவிட்ட ஏப்ரல் 4
குழப்பகரமான இன்றைய இலங்கை அரசியலில் எதிர்வரும் ஏப்ரில் 4 ஆம் திகதி தீர்க்கமான ஒரு தினமாக நோக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அன்றையதினம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பும் நடத்தப்படவிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நால்வர் உட்பட 55 பாராளுமன்ற உறுப்பினர்களினால் கைச்சாத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.கடந்த மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் விக்கிரமசிங்க தவறாக முகாமைத்துவம் செய்ததாக பிரேரணையில் பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற ஊழல் மோசடியே பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் பாரதூரமானதாகும்.அத்துடன் அண்மையில் மத்திய மாகாணத்தில் கண்டியிலும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்த சட்டம் , ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிதமர் தவறிவிட்டதாகவும் பிரேரணையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தேவையான எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தங்களால் திரட்டமுடியுமென்று கூட்டு எதிரணி அரசியல் வாதிகள் நம்பிக்கையுடன் கூறுகின்ற அதேவேளை, பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமென்பது சூரியன், சந்திரன் போன்று நிச்சயமானது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கணிசமான எண்ணிக்கையானோரும் பிரேரணைக்கு ஆதரவளிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அடுத்து நேரக்கூடிய விளைவுகள் குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்புகின்றன.
பாராளுமன்றத்தில் தற்போது கட்சிகளுக்கு இருக்கின்ற ஆசன எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய பட்சத்தில் பிரதமருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று அவரது கட்சி அரசியல்வாதிகள் நம்புகிறார்கள் போலத் தெரிகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலமாக பிரதமரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான ஏற்பாடு எதுவும் தற்போதைய அரசியலமைப்பில் இல்லை என்றபோதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் விக்கிரமசிங்கவின் மதிப்புக்கும் பதவியில் நீடிப்பதற்கான நியாயப்பாட்டுக்கும் பெரும் சேதம் ஏற்படும் என்பது மாத்திரம் நிச்சயம். அரசியல் சமுதாயத்தின் பல மட்டங்களிலும் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபா பணம் வழங்கப்படுவதாக கூட்டு எதிரணி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறது.பிரேரணையின் மீதான விவாதத்தின் இறுதியில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்வரை எதையுமே நிச்சயமாகக் கூறமுடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாயிருக்கக்கூடிய உறுப்பினர்களில் சாதாரண பெரும்பான்மை எண்ணிக்கையானவர்களின் ஆதரவு இருந்தால் பிரேரணை நிறைவேறியதாகக் கருதப்படமுடியுமா அல்லது பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்களில் (225) அரைவாசிக்கும் அதிகமான (113) உறுப்பினர்களின் ஆதரவு பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமா என்பது குறித்து தெளிவில்லாமல் இருக்கிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவையா என்று பாராளுமன்றச் செயலாளர் நாயகம் டபிள்யூ.பி.டி. திசாநாயக்கவிடம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றின் சார்பில் கேட்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சமயத்தில் பிரசன்னமாயிருக்கக்கூடிய உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் ஆதரவு பிரேரணையை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகும் என்று அவர் பதிலளித்திருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து அரசியலமைப்பு தெட்டத்தெளிவாக எதையும் கூறவில்லை என்பதே அரசியலமைப்பு நிபுணர்கள் பலரின் அபிப்பிராயமாக இருக்கிறது.பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் இறுதியில் நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்படக்கூடிய சூழ்நிலை தோன்றுமோ தெரியவில்லை என்று சில நிபுணர்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடவில்லை.அவர் அவ்வாறு செய்ததற்கான காரணத்தையும் விளங்கிக்கொள்ளமுடியவில்லை.ஆனால், பிரேரணையை சபாநாயகர் ஜெயசூரியவிடம் கடந்தவாரம் கையளித்த கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்குத் தலைமைதாங்கி முன்னணியில்செல்வதற்கு அவர் தவறவில்லை.அவரின் இந்த முரண்பாடான அல்லது புதிரான செயல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய வியூகங்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
எது எவ்வாறிருந்தாலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அரசியல் களம் சந்தடிமிக்கதாகவே காணப்படுகிறது.சில விசித்திரமான நிகழ்வுப்போக்குகளையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.பிரேரணைக்கு ஆதரவாகப் பேசுகின்ற சில சிரேஷ்ட சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் அதில் கைச்சாத்திடவில்லை.பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவேண்டுமென்ற யோசனையை முதலில் முன்வைத்த இராஜாங்க அமைச்சர் பிரதமரின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்.
பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கான செயற்பாடுகளில் கூட்டு எதிரணியினர் இறங்கியபோது அந்த இராஜாங்க அமைச்சர் மௌனமாகிவிட்டார்.ஆனால் இவ்வார ஆரம்பத்தில் அவர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராயிருப்பதாகவும் ஆனால் அவர்கள் வாக்கெடுப்பு தினத்தன்று சபைக்கு வராமலிருக்கக்கூடும் என்றும் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.
அண்மைக் காலமாக பல விவகாரங்களில் பிரதமர் விக்கிரமசிங்கவுடன் கடுமையான முரண்பாடுகளை வெளிக்காட்டிவரும் மைத்திரிபால சிறிசேன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார் என்பது முக்கியமானதொரு கேள்வி.கடந்த மாதத்தைய உள்ளூராட்சித் தேர்தல்களில் தனது சுதந்திர கட்சி பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது என்ற யதார்த்தத்தையும் பொருட்படுத்தாமல் பிரதமர் பதவி விலகவேண்டுமென்று கேட்ட ஜனாதிபதி சிறிசேன தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கவேண்டுமென்று கேட்கத் தீர்மானிப்பாரேயானால், இரு பிரதான அரசியல் கட்சிகளையும் பங்காளிகளாகக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் முடிவாகவே அது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை பிரேரணையை எதிர்க்குமாறு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொள்வாரேயானால் ,அவரின் வேண்டுகோளை அல்லது அறிவுறுத்தலை அவர்கள் சகலரும் மதித்து நடப்பார்களா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.
ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திர கட்சியும் கடந்த மூன்று வருடங்களாக தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துவருகின்ற போதிலும், தனித்து ஆட்சியமைப்பது குறித்து அவ்வப்போது அவற்றின் எண்ணத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தத் தவறவில்லை.பிரதமருக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பிரதமர் விக்கிரமசிங்க இல்லாத பரந்தளவிலான கூட்டரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த மூன்று வருட காலத்திலும் சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிரணியினரால் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதை எதிர்க்கத் தங்களால் முடியாது என்று கூறியிருக்கும் மூத்த அமைச்சரான எஸ்.பி.திசாநாயக்க தங்களது போராட்டம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கானதல்ல, விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக வேறு பொருத்தமான ஒருவரை பிரதமராக்கி, ஜனாதிபதி சிறிசேனவின் 2015 ஜனவரி ஆணையை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதாவது பிரதமர் விக்கிரமசிங்க இல்லாமல் அவரது கட்சியையும் உள்ளடக்கியதாக ஒரு பரந்த கூட்டரசாங்கத்தை அமைப்பது பற்றியே அமைச்சர் திசாநாயக்க பேசுகிறார் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஜனாதிபதியின் அந்தரங்க சம்மத சமிக்ஞை இல்லாமல் திசாநாயக்க இவ்வாறு கூறுகிறார் என்று நம்பவும் முடியவில்லை.
அதேவேளை, பிரதமர் விக்கிரமசிங்கின் பொறுப்பில் இதுவரை இருந்துவந்த மத்திய வங்கி மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகியவற்றை நிதியமைச்சரின் பொறுப்பின் கீழ் மீண்டும் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி சிறிசேன இவ்வாரம் வெளியிட்டமையும் பிரதமருக்கு அவர் சொல்லவிரும்புகின்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கிறது.முன்னதாக பிரதமர் தலைமையில் இயங்கிவந்த பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழுவையும் சிறிசேன கலைத்துவிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படக்கூடிய சூழ்நிலை தோன்றினாலும் கூட முன்னைய அதிகாரங்களுடன் பொறுப்புக்களுடன் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடருவதை ஜனாதிபதி விரும்பவில்லை என்பதையே அவரின் இந்த நடவடிக்கைள் வெளிக்காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விளைவாக பிரதமர் எதிர்நோக்குகின்ற அரசியல் சவாலை முறியடிப்பதில் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கியப்பட்டவர்களாகச் செயற்படுவார்களா அல்லது அவரின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டுமென்று நீண்டகாலமாக உட்கிடையாக இருந்துவருகின்ற நோக்கத்தைச் சாதிப்பதற்கு இச் சந்தர்ப்பத்தை அவர்களில் சிலர் பயன்படுத்திககொள்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
News: tamilenews.com