இன்று இரவு அமுலாகும் முழுநேர பயணத்தடை காலத்தில் கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை தீவிரமாக இருக்கும்..! பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை..
இன்று இரவு 11 மணி தொடக்கம் முழுநேர பயணத்தை விதிக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு, பயணத்தடை குறித்த அறிவித்தல்களை பின்பற்றி நடக்கவேண்டும். எனவும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் , எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரையில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் அன்றைய தினம் இரவு 11.00 மணிமுதல்
மீண்டும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும். இதன்போது அத்தியாவசிய தேவையின்றி செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள்
414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 11 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மேல் மாகாணத்தில் 9265 பேர் கண்காணிக்கப்பட்டு , முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2590 பேருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் , 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணத்தின் எல்லையை கடக்க முற்பட்ட 2250 வாகனங்களில் பயணித்த 2880 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக எல்லையை கடக்க முற்பட்ட 140 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.