மாகாண சுதேச/சித்த ஆயுள்வேத மருத்துவர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்காதது ஏன்..? மாகாண சுகாதார அமைச்சு அசமந்தம்..
வடமாகாணம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தாமதம் காட்டப்படுகிறது.
இது குறித்து சுதேச மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், எமக்கான தடுப்பூசி மற்றும் முக கவசங்கள், உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எவையும் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையே இப்போதும் காணப்படுகிறது.
இதனால் மிகுந்த இக்கட்டான சூழலில் நாம் பணியாற்றவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. குறிப்பாக தனியே ஒரு மருத்துவர் பணிபுரியும் இடங்களில் மாற்று வழியின்றி தொடர்ந்து பணிபுரிய வேண்டிய நிலைகளில் உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசாங்கம் சித்த /ஆயுள்வேத மருத்துவமனைகளை தயார்படுத்த சொல்லியிருக்கின்றது. இந்நிலையில் சித்த/ ஆயுள்வேத மருத்துவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடமாகாண சித்த மருந்துமனைகளில் சிகிச்சை பெறவரும் நோயாளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த தனிமைப்படுத்தும் வசதிகள், வெப்பநிலை அளவிடும் கருவிகள் என்பன வழங்கப்பட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.