வடமாகாணம் முழுவதும் பேராபத்தில்..! மக்களின் ஒத்துழைப்பு அவசியம், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கோரிக்கை..
வடமாகாணம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் சுகாதார பிரிவுக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்ராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுநிலைமை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில், பிசிஆர் பரிசோதனை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் தடுப்பு ஊசி ஏற்றும் பணி தொடங்க உள்ளது. ஒரு நாளில் ஒரு தடவை மேற்கொண்ட பரிசோதனையினை, இனிவரும் காலத்தில் இரவு நேரத்திலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளாந்தம் 800க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. சுகாதார நடைமுறைகள் மற்றும் சுகாதாரத்துடன் கூடிய பழக்கவழக்கங்களை கையாண்டு இந்த தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதையும் நாங்கள் முக்கியமாக கேட்டுக்கொள்கின்றோம். தற்பொழுது யாழ் குடா நாட்டில் தொற்று அதிகரித்து செல்லும் நிலை காணப்படுகின்றது.
இலங்கையிலும் சரி யாழ்.மாவட்டத்திலும் சரி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. வெளி நோயாளர் பிரிவுக்கு வருபவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்தால் அவர்கள் உடனடியாக அண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனையும் அவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. அப்படி செய்யும் பொழுதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மையம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு போதுமான ஒட்சிசன் சிலிண்டர்கள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு தங்கி சிகிச்சை பெறுவோருக்கு தேவையான வசதிகள் நோயாளர் காவு வண்டி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை என்றால் அவர்கள் உடனடியாக
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.