யாழ்.மாவட்ட செயலகத்தில் 3 பிரிவுகளின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டது..! 23 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை, யாழ்.மாவட்ட செயலர் தகவல்..
யாழ்.மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 23 உத்தியோகஸ்த்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மேலும் மாவட்ட செயலகத்திலுள்ள 3 பிரிவுகளின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த பிரிவுகளின் சேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், உதவி அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவருடன் நெருக்கமாக பழகிய 23 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் மாவட்ட செயலகத்திலுள்ள 3 பிரிவுகளின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக மோட்டார் திணைக்களம், வெளிநாட்டு பணியகம், பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆகியவற்றின் சேவைகளே மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பிரிவுகளில் சேவை பெற காத்திருக்கும் மக்கள் மாவட்ட செயலக வாயிலில்
உள்ள உத்தியோகஸ்த்தரிடம் தமது தேவையை எழுத்துமூலம் வழங்கி பெற்றுக் கொள்ளலாம். அது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமேயாகும். மேலும் மக்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் மாவட்ட செயலக வாயிலில் முறைப்பாட்டு பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் சேவை தொடர்பாக எழுத்துமூல கோரிக்கையினை வழங்கினால் அதன் ஊடாகவும் சேவைகளை வழங்க முடியும் என மாவட்ட செயலர் கூறியுள்ளார்.