யாழ்.மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை, மிக குறைந்த மருத்துவ வசதிகளே உள்ளன..! மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள். மாவட்ட செயலர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை, மிக குறைந்த மருத்துவ வசதிகளே உள்ளன..! மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள். மாவட்ட செயலர் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளே காணப்படும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலமை தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்று அதிகரித்து காணப்படுகின்றது நேற்றைய தினம் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் 1688 நபர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். 

21 மரணங்கள் யாழ்குடாநாட்டில் பதிவாகியுள்ளன இதனை விட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் 1475 குடும்பங்களைச் சேர்ந்த 2261 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகின்றது. அதேவேளையில் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் 

மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களிற்கு தடை விதித்தும் இருக்கின்றோம். சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்கள் சுகாதார வழி காட்டல்கள் தடைகளுக்கு இணங்க செயற்படுத்தியுள்ளோம். 

தற்போது பொலிஸார் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள். இந்த நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

அபாயகரமான நிலமை நாடு முழுவதும் காணப்படுகின்றது. மக்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி தமது செயல்களைசெயற்படுத்த வேண்டும். அந்த வகையில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் யாழ்.மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். அதாவது ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக 

மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்கு ரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம். 

அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. 

எனவே அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் எடுத்துள்ளார்கள். எனவே மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே புதிய வீரியமிக்க வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமையால்  சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் இறுக்கமாக பின்பற்றி செயற்பட வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு