முல்லைத்தீவு கிராமங்கள் குறித்த ஜனாதிபதியின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்!
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள எட்டு கிராமங்களது காணி நிர்வாகத்தை மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் உத்தரவை இரத்துச் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர்,
முப்பத்திரண்டு வருட யுத்தத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர். 1984ஆம் ஆண்டு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் அங்கிருந்து இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் 2012ஆம் ஆண்டுவரை இடம்பெயர்ந்தவர்களாக வேறு இடங்களில் தங்கியிருந்தனர். போருக்குப் பின்னர் அங்குள்ள நிலங்களின் சட்டரீதியான தமிழ் உரிமையாளர்கள் மீளக்குடியேற முற்பட்டபோது அந்நிலங்கள் மகாவலி அபிவிருந்தி அதிகாரசபைக்குட்பட்ட பிரதேசம் என்று கூறப்பட்டது.
கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் கிழக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் மகாவலி அபிவிருந்தி அதிகாரசபையின் கீழ் வருவதாக 2007ஆம் ஆண்டு வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் மீளக்குடியேறி நெற் செய்கை மேற்கொள்ள முற்பட்டபோது சட்டரீதியான உரித்துடைய உறுதிப்பத்திரங்களைக் கொண்ட காணிகளிலிருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்த எட்டு கிராம சேவகர் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்பதற்கு முயன்றது.
காணிகளை நிர்வகிக்க அதிகாரத்தை தாம் பெற்றுகொள்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தங்களுக்கு மாற்றுமாறும் மகாவலி அபிவிருந்தி அதிகாரசபை பிரதேச செயலாளருக்கு அறிவித்தது.
இது இவ்வாறிருக்க கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் திகதி வவுனியா வடக்கு நெடுங்கேணிக்கு பயணம் செய்த ஜனாதிபதி, சிங்களக் குடியேற்றம் நடந்த போகஸ்வெவ என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள சிங்கள மக்களைச் சந்தித்தார்.
அந்த கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு தமிழ்க் கிராமங்களும் ஒரு சிங்களக் கிராமமும் உள்ளன. கொக்கச்சன் குளம் என்ற தமிழ் கிராமம் பின்னர் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு போகஸ்வெவ என்று மாற்றப்பட்டது.
அந்த போகஸ்வெவ சிங்களக் கிராமத்திற்குச் சென்ற ஜனாதிபதி தமிழ் கிராமங்களிலுள்ள மக்களுக்கு தன்னைச் சந்திக்குமாறு அறிவிக்கவில்லை. தனித்து சிங்களக் கிராமத்தில் உள்ளவர்களை மட்டும் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கமால் தன்னிச்சையாக இந்த நிலங்களை பொறுப்பேற்குமாறு மகாவலி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இதற்கு பொறுப்பான அமைச்சர் இந்தவிடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.