SuperTopAds

பாக்நீரிணையை 8.25 மணி நேரத்தில் நீந்திக் கடந்த போலீஸ்: - புதிய சாதனை

ஆசிரியர் - Admin
பாக்நீரிணையை 8.25 மணி நேரத்தில் நீந்திக் கடந்த போலீஸ்: - புதிய சாதனை

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக்நீரிணை கடல் பகுதியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் 8.25 மணி நேரத்தில் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்தார்.வெளிநாடுகளில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவற்றை நீந்தி கடப்பதை போல் இந்தியா - இலங்கை இடையேயான பாக்நீரிணை பகுதியையும் நீந்திக் கடந்து சாதனைச் செய்யும் முயற்சிகளில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

1960-ம் ஆண்டு முதல் இது வரை இந்தச் சாதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1994-ம் ஆண்டு 12 வயதே நிரம்பிய குற்றாலீஸ்வரன் என்ற சிறுவன் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான 32 கி.மீ தூரம் கொண்ட பாக்நீரிணை பகுதியை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெரும் சாதனை படைத்தார். நேற்று (சனிக்கிழமை) சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபு தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியினை 11.58 மணி நேரத்தில் நீந்திக் கடந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலைமைக் காவலரான மோது கூரி துளசி சைத்தன்யா என்பவர் இன்று தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணை பகுதியினை 8மணி 25 நிமிடங்களில் நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்தார். இன்று அதிகாலை 1 மணிக்கு தலைமன்னார் துறைமுக பகுதியில் இருந்து நீந்தத் துவங்கிய துளசி சைத்தன்யா இன்று காலை 9.25 மணிக்குத் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரை ஏறினார். மிகக் குறைந்த நேரத்தில் பாக்நீரிணையை நீந்திக் கடந்து வந்த தலைமை காவலர் துளசி சைத்தன்யாவை மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ், மீன் துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் மற்றும் மதுரை மாவட்ட நீச்சல் கழகத்தினர், சைத்தன்யாவின் குடும்பத்தினர், பெற்றோர்கள், தனுஷ்கோடிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் வரவேற்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சாதனைப் படைத்த சைதன்யா கூறுகையில் ''எனது 9 வயதில் நீச்சல் ஆர்வம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து பயிற்சி செய்து மாநில, தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றேன். 2011-ல் நடந்த போலீஸ் தேர்வில் சிறந்த பங்களிப்பிற்காக தேர்வானேன். இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தில் நடந்த உலக போலீஸார் போட்டியில் பங்கேற்று 3 வெண்கல பதக்கங்கள் பெற்றேன்.

தற்போது பயிற்சியாளர் கணேஷ் அளித்த பயிற்சியின் மூலம் இந்தச் சாதனையை படைத்துள்ளேன். இதைவிடக் குறைந்த நேரத்தில் இந்தத் தூரத்தை கடக்க எண்ணினேன். ஆனால் அதிகமான நீரோட்டம் மற்றும் ஜெல்லி மீன்கள் இடையூறினால் அது நிறைவேறவில்லை. இதனைத் தொடர்ந்து உலகில் உள்ள முக்கிய கால்வாய்களை நீந்தி சாதனை படைக்க ஆர்வமாக உள்ளேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு, இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் வழிகாட்டியாக உதவிய கமாண்டர் உன்னி, நிகழ்ச்சி மேலாளர் முரளி மற்றும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.