சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதிக்கு கொரோனா தொற்று..! சத்திர சிகிச்சை நிறுத்தம், 7 பேர் தனிமைப்படுத்தலில், ஆபத்தில்லை என்கிறது சுகாதார பிரிவு..
கிளிநொச்சி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பகுதியில் உள்ள தாதியின் குடும்பத்தினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த தாதியிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
எனினும் தாதியிடம் உள்ள வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அபாயமற்றது எனவும், தாதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாதியுடன் நெருங்கி பழகிய 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களிற்கான சத்திர சிகிச்சை தவிர்ந்து ஏனைய திகதியிடப்பட்ட
சத்திர சிகிச்சைகள் 30ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.