யாழ்.திருநகரில் ஹோட்டல் கல்லூரி..! 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு, இடத்தேர்வும் பூர்த்தி, அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை..
வடமாகாணத்தில் ஹோட்டல் கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சினால் முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக ஹோட்டல் பயிற்சி கல்லூரி யாழ்.திருநகரில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபாவை சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கியுள்ளது
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் வேலையில்லா பிரச்சனை தலைதூக்கி உள்ள நிலையில் இலங்கையில் வறுமையான மாவட்டமாக வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டம் விளங்குகிறது.
தேர்தல் காலங்களில் தேசியம் பேசுவோர் மக்களின் அன்றாட அபிவிருத்தியையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தாது தமது வாழ்க்கைத் தரங்களையே உயர்த்தியுள்ளார்கள்.
நான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் செல்லும் போது தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டேன்.
மக்கள் எனது கோரிக்கைக்கு தமது வாக்குகளினால் பலம் சேர்த்து யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கில் என்னைப் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச என்னை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளராக நியமித்ததோடு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பதவியையும் எனக்கு வழங்கினார்கள்.
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அரசாங்கம் எனக்கு பதவிகளை வழங்கியுள்ளது. ஆகவே மக்கள் எனக்களித்த ஆணையை என்றைக்கும் மனதில் நிறுத்தி மக்களுக்கான பணியை முடிந்தவரை செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.