யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..! கொரோனா தொற்று பரவல் தீவிரமடையலாம் என யாழ்.மாவட்ட செயலர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..! கொரோனா தொற்று பரவல் தீவிரமடையலாம் என யாழ்.மாவட்ட செயலர் எச்சரிக்கை..

வடமாகாணத்தில் கொரோனா தொற்று தீவிரமடையலாம். என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்.மாவட்ட மக்கள் மிக விழிப்பாக இருப்பது அவசியம். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டாவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்தவாரம் தொடக்கம் கொரோனா தொற்று நிலை அதிகரித்தே உள்ளது. 

ஆனாலும் இந்தவாரம் தொற்று தீவிரம் சற்று குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் தொடர்ந்தும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், சந்தைகள், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக செய்துவருகின்றனர். 

திருநெல்வேலி கிராமத்தில் பாரதிபுரம் தவிர்ந்த மற்றய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் தொடர் முடக்கலில் உள்ள பாரதிபுரம் கிராமத்தை நாளைய தினம் தொடக்கம் விடுவிப்பதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

பாரதிபுரத்தில் நேற்றய தினம் 97 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இது திருப்தியளிப்பதாக உள்ளது. இதனால் நாளைய தினம் பாரதிபுரம் கிராமத்தை முற்றாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் யாழ் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது. அதற்குரிய சுகாதார வழிமுறைகளை சுகாதார வழிகாட்டல்களையும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்டுவருகின்றன.அதன் அடிப்படையில் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 

கல்வி செயற்பாடுகள் வழமைபோல் முன்னெடுக்கப்படுகின்றன. தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கபடுவதன் காரணமாக பொதுமக்கள் சற்று விழிப்பாக செயற்பட வேண்டும். குறிப்பாக நகரப்பகுதி மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் பொதுமக்கள் அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அநாவசிய நடமாட்டங்களை தவிர்த்து தேவையானவற்றுக்கு மாத்திரம் வருகை தரலாம். அவ்வாறு வரும்போது முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் யாழ் நகரப்பகுதியில் இராணுவத்தினரால் தொற்று நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

சுகாதாரப் பகுதியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.இந்த வகையில் மாவட்டத்தினை ஒரு தொற்றில்லாத பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றோம். 

தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த விழிப்புணர்வுகளை செவி மடுத்து பொதுமக்கள் நடப்பது முக்கியமானது.  நிலைமை தீவிரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.

எனவே அவற்றுக்குத் தக்கவாறு சில முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையிலே பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமானது. அதேநேரத்தில் சில கூட்டங்கள் ஏற்பாடுகளை செய்யும் போது அதற்குரிய நடைமுறைகளை அனுமதி பெற்று சுகாதாரப் பகுதியினர் ஆலோசனைகளை பெற்று செயற்படுதல் மிக அவசியமாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு