வீதியில் நின்று தர்க்கம் புரிந்தவர்களிடம் பிரச்சனை என்ன? என வினவிய குடும்பஸ்த்தர் அடித்து கொல்லப்பட்டார்..!
கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் அந்த வழியால் வந்தவர் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில்
இரு நபர்களிற்கிடையில் முரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன சத்தம் என வினவியுள்ளார்.
இதன்போது குறித்த நபர் மீது மற்றய நபர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் மது போதையில் இருந்ததாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை அடுத்து தாக்குதலிற்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்
சிகிச்சை பயனளிக்காது என தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்க மாற்றப்பட்டார். இந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் இன்று மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முனனெடுத்து வருகின்றனர்.