புத்தாண்டை புத்தெழுச்சியுடன் கொண்டாடுங்கள்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சித்திரை புத்தாண்டைக் கொண்டாடுவது போல இந்து மத மக்கள் இந்திய நாட்டிலும் உலக நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் விழாவாக இடம்பெறுவது பாரம்பரியமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுமிருப்பதனால் உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் 1958 முதல் இனக் கலவரங்களினாலும், இனப் போரினாலும் பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து விட்டும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் இன விடுதலையுமின்றி தினமும் பௌத்த சிங்கள ஆட்சியாளர்களினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களாய் தங்கள் தேசத்தினதும், மக்களின் பாதுகாப்பற்ற மனிதர்களாய் அவலத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர்.
இருப்பினும் தங்கள் இன விடுதலைக்காகவும், தங்கள் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் தினமும் போராடிக்கொண்டேயிருக்கின்றனர்.
எவ்வாறெனினும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திடசங்கற்பத்தோடு சித்திரைப் புத்தாண்டையும் புத்தெழுச்சியுடன் கொண்டாடுங்கள் என்றே வேண்டி நிற்கின்றோம் என்றார்.