யாழ்.மாநகரை அழகுபடுத்துவது பயங்கரவாதம் என்றால் அந்த பயங்கரவாதத்தை தொடர்ந்தும் செய்வேன்..! மணி ஆவேசம்..
யாழ்.மாநகரத்தை அழகுபடுத்த முயற்சித்தமை பயங்கரவாதம் என்றால் அந்த பயங்கரவாதத்தை நான் மக்களுக்காக தொடர்ந்தும் செய்வேன்.
என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதல்வர் என்ற வகையில் யாழ்.மாநகரத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் செய்வது எனது கடமையாகும்.
ஆனால் யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ்.நகரத்தை அழகு படுத்துவதுவதை தடுப்பதற்காக என்னை கைது செய்தும் அதிகாரிகளின்விடயங்களிலும் தேவையற்ற தலையீடுகளை செய்தார்கள்.
விசாரணைக்காக என்னை பொலிஸ் நிலையம் அழைத்து என்னை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதாக கூறி வவுனியா அழைத்துச் சென்றார்கள்.
அங்கு என்னை பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் வாக்குமூலம் பெற்றார்கள்.
அவர்களிடம் ஒரு விடயத்தை நான் கேட்டிருந்தேன் நான் யாழ் மாநகரத்தை அழகுபடுத்த செய்த வேலை திட்டத்தை எக் காரணத்தின் அடிப்படையில் நீங்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறீர்கள் என கேள்வி கேட்டிருந்தேன்.
பின்னர் அவர்களை என்னை சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்குப்பதிவு செய்து யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த இருந்தார்கள்.
எனக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உட்பட 25 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஒன்று கூடியிருந்தார்கள்.
அதிலும் இரவு பகல் என்று பாராமல் 50 இற்கும் மேற்பட்ட பெண் சட்டத்தரணிகள் எனது விடுதலைக்காக நீதிமன்றம் வந்திருந்தமை இட்டு நான் பெருமை அடைகிறேன் என அவர் தெரிவித்தார்.