SuperTopAds

தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைக்கு மாற்றுங்கள்..! புதிதாக வரும் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை “கொட்டியா” என அச்சுறுத்துகின்றனர்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைக்கு மாற்றுங்கள்..! புதிதாக வரும் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை “கொட்டியா” என அச்சுறுத்துகின்றனர்..

அனுராதபுரம் சிறைச்சாலையில் அசாதார சூழல் நிலவிவரும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யுமாறு, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், இந்நடவடிக்கையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழ் அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டனர். 

அனுராதபுரம் சிறையில் பல நெருக்கடிகள் மத்தியில் 26 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 20பேர் தண்டனை பெற்றவர்களாகவும் எஞ்சியவர்கள் விசாரணை கைதிகளாகவும் உள்ளனர்.

தற்போது தமிழ் அரசியல் கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் புதிது புதிதாக சிறைக்கு கொண்டுவரப்படும் சிங்கள கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை கொட்டியா என திட்டுவதும் அச்சுறுத்துவதும் அதிகரித்துவருகின்றது.

இதுவொரு முறுகல் நிலையினை தோற்றுவித்துவருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை பற்றி இந்த அரசு வாயே திறக்க மறுக்கின்றது. புதுவருடத்தை முன்னிட்டு எண்ணாயிரம் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ள அரசு 

ஒரு தமிழ் அரசியல் கைதியை பற்றி கூட பேச தயாராக இல்லை. அதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிது புதிதாக தமிழ் இளைஞர் யுவதிகள் தற்போது கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

ஆனால் இத்தகைய கைதுகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் எவருமே வாய் திறக்க தயாராக இல்லை. இம்முறை தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

அதனை முன்னிட்டாவது அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க அரசு முன்வரவேண்டுமென அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.