யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் மிக விரைவில் மீள ஆரம்பம்..! விமான ஓடுதள விஸ்தரிப்பு பணிகளும் ஆரம்பம்..
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் அடுத்த சில மாதங்களில் ஆரம்பமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை அடுத்த சில மாதங்களில் ஆரம்பமாகும்.
அத்துடன் மாலைதீவை இணைத்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் மூன்று கட்டங்களாக மேம்பாடுத்தப்படும். விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன,
அவை மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். மூன்றாம் கட்டத்தில் ஓடுபாதை வடக்கே 3,200 மீற்றர் வரை விரிவுபடுத்தப்பட்டு பாரிய விமானங்களை தரையிறக்கும் வகையில் ஓடுபாதை விஸ்தரிக்கப்படவுள்ளது.
ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலைய முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.