SuperTopAds

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து 48 வயது இந்திய பெண் ஆசிரியர் சாதனை!!

ஆசிரியர் - Editor II
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து 48 வயது இந்திய பெண் ஆசிரியர் சாதனை!!

இந்தியாவின்  தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான  ஆசிரியர் ஒருவர் தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி அன்று மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்துள்ளார்.

பாக்கு நீரிணை கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்துள்ளார். 

தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக்கு நீரிணையை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்துள்ளார். 

இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 48 வயதான சியாமளா கோலி தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக்கு நீரிணை கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் பாக்கு நீரிணையை நீந்தி கடந்த 13 ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கணையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கணை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.