இளம் குடும்பஸ்த்தர் மீது கண்மூடித்தனமான வாள்வெட்டு தாக்குதல்..! ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு..

முல்லைத்தீவு - மல்லாவி புகழேந்திநகர் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய பொலிஸார் தயங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
மல்லாவி இல 188 புகழேந்தி நகர்ப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தனது கால் நடைகளை பராமரித்து பட்டியில் அடைத்து விட்டு தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் மீது கடந்த 13 ஆம் திகதி இரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த இளம் குடும்பஸ்தர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் குறித்த சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாததால் தொடர்ந்தும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது புகழேந்தி நகர் பகுதியில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி மல்லாவி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நடராஜா அகிலன் (வயது-36) என்பவரிடமிருந்து நேற்று வாக்குமூலங்களை பெற்றிருப்பதாகவும் அதனடிப்படையில் சந்தேக நபர்களை
கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.