இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது
இசைஞானி இளையராஜாவுக்கு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ஆம் ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு இளையராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா தலைவர் பி. பரமேஸ்வரன், ஹிந்துஸ்தானி பாடகர் குலாம் முஸ்தபா கான் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 43பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஏனையவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விழாவில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார்.