18 மில்லியன் ஒதுக்கீடு, 14 மில்லியனுக்கே வேலை நடக்கிறது..! வீதி புனரமைப்பில் முறைகேடு என மக்கள் புகார்..
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் வீதி அமைப்பு பணிகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தபோது தரமற்ற அபிவிருத்தி பணிகள் அங்கு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.
தர்மபுரம் 13ம் யூனிற் வீதியின் 540 மீட்டர் நீளம் கொண்ட கொங்கிரீட் வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. எல் டி எஸ் பி திட்டத்தின் கீழ்
அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் குறித்த வீதியானது தரமற்ற வகையில் இடம்பெற்ற வருவதாக மக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
820 மீட்டர் நீளம் கொண்ட குறித்த வீதியில் 280 மீட்டர் வீதி தாரினாலும், எஞ்சிய 540 மீட்டர் வீதி கொங்கிரீட்டினாலும் அமைப்பதற்கு பொறியியலாளர்களால் சிபாரிசு செய்யப்பட்டது.
அதற்கான பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் பிரதேச மக்களல் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
கரைச்சி பிரதேச சபைக்க சொந்தமான குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் குழுவின் மேற்பார்வையில்
உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் கண்காணிப்பில் குறித்த அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.18 மில்லியன் நிதி குறித்த வீதியின்
அபிவிருத்தி பணிகளிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில் 14 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு முன்பாகவே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையையும்,
அதனை மூடி மறைக்க ஒப்பந்தகாரர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவதானிக்க முடிகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பில்
மக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டும் வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் எழுத்துமூலமான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டபோதிலும்
அபிவிருத்தி பணிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த வியடம் தொடர்பில நேரடியாக அவதானித்த எம்மாலும்
அதனை உறுதிப்படுத்த முடிகின்றது.தரமற்ற மணலை பயன்படுத்தி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த விடயம் தொடர்பில் கண்காணிப்பில் உள்ளவர்களை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்த போதும் எவரும் அவ்விடத்தில் நிற்கவிலலை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த மணலுடன் களி மற்றம் உக்கிய திண்ம பொருட்களும் கிடப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயம் தொடர்பில் அங்கு வருகைதந்த
அப்பிரதேசத்திலிருந்த தெரிவான கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசாவிடம் வினவியபோது, குறித் வியடம் தொடர்பில்
மக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை மெற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாரிய நிதி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்ாறான அபிவிருத்தி பணிகள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதனால் பாதிக்கப்படப்போவது
மக்களின் நீண்டகால பயன்பாட்டுக்குரிய அத்தியாவசிய தேவைகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என குறிப்பிடும் பிரதேச மக்கள்,
இவ்வியடம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சம்மந்தப்பட்ட திணைக்களத்திடம் பிரதேச மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.