யாழ்.மாவட்டத்தில் ஆட்டோ சாரதிகளை இலக்குவைத்து நுாதன கொள்ளை..! பெண் தலமையிலான குழு கைங்கரியம், பொலிஸார் எச்சரிக்கை..
யாழ்.மாவட்டத்தில் ஆட்டோ சாரதிகளை இலக்குவைத்து நுாதன கொள்ளையில் ஈடுபடும் பெண் தலமையிலான குழு தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது,
யாழ்.புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமாட பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை
மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவார். பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும்,
அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்து செல்வர்.
அங்கு சென்றதும் அவர் முதலில் அந்த வீட்டிற்குள் சென்று விட்டு , சில நிமிடத்தில் ஏதேனும் காரணம் கூறி முச்சக்கர வண்டி சாரதியையும் வீட்டிற்குள் அழைப்பார்.
சாரதி வீட்டிற்குள் சென்றதும் வீட்டினுள் இருக்கும் இளைஞர்கள், சாரதி அந்த பெண்ணுடன் தவறான நோக்குடன் நடந்து கொள்வதற்கு வீட்டினுள்
அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி சாரதியை மிரட்டி பணத்தினை கொள்ளையிடுவார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு
ஓர் முச்சக்கர வண்டி சாரதியை வீட்டினுள் அழைத்து சென்று அங்கிருந்த இளைஞர்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவரது தங்க சங்கிலி
மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்வதற்காக பாதிக்கப்பட்ட சாரதி சென்றிருந்த போது , அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது தொலைபேசியில் கொள்ளை
கும்பலின் புகைப்படங்களை காட்டி இவர்களா ? கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் என வினாவியுள்ளார்.அவர் அவர்களை அடையாளம் காட்டிய பின்னர்,
அவரின் தொடர்பு இலக்கத்தை பெற்ற பின்னர் முறைப்பாடுகள் எதனையும் பதியாது. பாதிக்கப்பட்ட நபரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.