சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம.நடராஜன் இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் காலமானார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் குளோபல் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் மாதம் வீடு திரும்பினார்.
நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளால் மார்ச் 16ஆம் திகதி நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் கருவி பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ம.நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 1.35மணிளவில் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நடராஜனின் உடல் காலை 7மணி முதல் பெசண்ட் நகரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11மணிக்கு அவர் பிறந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.