அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு..! கொடையாளர்கள் முன்வந்து இரத்ததானம் செய்யுங்கள், வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை அழைப்பு..
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக பிராந்திய குருதி மாற்று பிரயோக வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை சுட்டிக்காட்டியுள்ளதுடன், கொடையாளர்கள் குருதி வழங்குமாறு கேட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஊடகங்களை சந்தித்து அவர் மேற்படி கோரிக்கையினை விடுத்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுபபாடு நிலவுகின்றது.
தற்போதுள்ள கொவிட் 19 தொற்று அபாயம் காரணமாக இரத்ததான முகாம்களை நடத்த முடியாத துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நாடளாவியரீதியில் இரத்த சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
இதனால் கர்ப்பவதி பெண்கள், விபத்துக்களில் சிக்குவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு அதிகளவான இரத்தம் தேவைப்படுகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடையவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும்.
(NBTS )தேசிய குருதி மாற்று பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முற்பதிவுகளை செய்து குருதியை வழங்க முடியும். குருதி வழங்குவதால் உடலுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை. நான்கு மாதத்துக்கு ஒரு தடவை
ஒருவர் குருதி வழங்க முடிவதோடு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் குருதி வழங்கமுடியும். சுய தனிமைப்படுத்தலில் வீடுகளில் இருந்தவர்கள் 21 நாட்களுக்குப் பின்னரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தோர்
3மாத காலத்திற்குப் பின்னரும் குருதி வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.